×

உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 111வது இடம்: அளவீட்டு முறை சரியில்லை என ஒன்றிய அரசு விளக்கம்

 

புதுடெல்லி: உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 111வது இடம் கிடைத்துள்ளது. ஆனால், பட்டினி குறியீட்டு பட்டியல் அளவீட்டு முறைகளில் குறைகள் உள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பட்டினி அளவு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிந்து உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதன் அடிப்படையில் 125 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 125 நாடுகள் பட்டியலில், இந்தியா 111வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது. அண்டை நாடுகளான, பாகிஸ்தான்(102), வங்கதேசம்(81),நேபாளம்(69), இலங்கை(60) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறப்பான நிலையில் உள்ளன.இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 16.6 %, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 % உள்ளது.

15 மற்றும் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் ரத்த சோகை பாதிப்பு 58.1 % உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா ஒட்டுமொத்தமாக 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது பட்டினியின் அளவு தீவிரமாக உள்ளது என்பதை குறிக்கிறது. உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியல் நாட்டின் உண்மை நிலையை பிரதிபதிலிக்கவில்லை என ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உலக பட்டினி குறியீடு பட்டியல் அளவீட்டு முறைகளில் பல குறைகள் உள்ளன. இந்த குறியீடு கணக்கிடப்படும் நான்கு குறிகாட்டிகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே அது முழு மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக கூற முடியாது. 3000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

சத்தான உணவு: கார்கே கேள்வி: உலக பட்டினி குறியீட்டில் இந்தியா பின்னடைவு அடைந்துள்ளதற்கு மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில்,தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை 2019-2021ல் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 57 % பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. சர்வதேச தரவுகள் என்றால் மோடி அரசுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. நாட்டில் ஏராளமான மக்கள் சரியான உணவில்லாமல் இரவு துாங்க செல்கின்றனர் என இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடும் விலைவாசி உயர்வால் 74 % இந்தியர்கள் சத்தான உணவை எடுத்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். இது உண்மையா, இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 111வது இடம்: அளவீட்டு முறை சரியில்லை என ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Union Government ,New Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...